search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலக்காடு ரெயில் நிலையம்"

    பாலக்காடு ரெயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான 3 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் ஓட்டலும், கீழத்தளத்தில் பேக்கரி, லாட்டரி உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வருகிறது.

    60 வருட பழமையான கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    நேற்று மதியம் மேல் மாடியில் உள்ள ஒரு தூணை மாற்றும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தூணை அகற்றியபோது கட்டிடத்தின் மேல்மாடி வலுவிழுந்தது. இதனால் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் அலறி சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து தகவல் கிடைத்தும் கலெக்டர் பாலமுரளி, எஸ்.பி. தேபேஸ்குமார் பெகரா மற்றும் பாலக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள், மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் என மொத்தம் 45 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத தூண்கள் அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனையடுத்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய ஜான் (வயது 51), ஜெகதீஷ் (57), பிரவீனா (20), சாலினி (30), சித்தார்த் (28), சுனில் (43), ஷாபி (29), ராமன் (38), ‌ஷமீர் (28), உஷா (28) ஆகிய 10 பேரையும் படுகாயத்துடன் மீட்டனர். 3 பெண்கள் உள்பட 10 பேரையும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×